Friday, November 11, 2011

REVOLUTION 2020 - புத்தக விமர்சனம்

Five point someone, One night@ call center, The 3 mistakes of my life, 2 states போன்ற விற்பனையில் சாதனை படைத்த நூலின் ஆசிரியர் சேத்தன் பகத்தின் சமீபத்திய வெளியீடு இப்புத்தகம். காதல், காமம், நட்பு, சோகம், நகைச்சுவை என எல்லாமும் கலந்து கட்டி அடிக்கும் இவரின் புத்தகத்தில். இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இவரின் Five point someone நாவலை தழுவி எடுக்கப்பட்ட 3 இடியட்ஸ் மெகா ஹிட்டடித்தது. இந்த நாவலின் உரிமையையும் வாங்க கடும் போட்டி என்று செய்தி. ஒரு முழு நீள மசாலா படம் பார்த்த அனுபவத்தை தரும் இந்நாவலின் கதை -----



வாரணாசியில் கங்கா டெக் நிர்வாகவியல் கல்லூரி திறப்பதற்காக சேத்தன் சிறப்பு விருந்தினராக செல்கிறார். அந்த கல்லூரியின் நிறுவனர் கோபால் விழா முடிந்ததும் சேத்தனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.அங்கு  கோபால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலைக்கு செல்கிறார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரிடம், தன் கதையை கோபால்  சொல்வது  போல கதை விரிகிறது.

கோபால் -அம்மா இல்லாத அவனுக்கு அப்பாவின் தினசரி ரொட்டி போரடித்ததால்,பள்ளியில் பிரேயர் நடக்கும் நேரத்தில் ஆர்த்தியின்
கேக்கை எடுத்து தின்று விடுகிறான் . ஆசிரியையிடம் மாட்டிக்கொள்வதில் இருந்து மோதலுடன் ஆர்த்தியுடன் நட்பு ஆரம்பம் ஆகிறது.

பள்ளி பருவத்தில் இருந்தே கோபாலுக்கு ஆர்த்தியும், ஆர்த்திக்கு கோபாலும் தான் தோழர்கள். கோபாலின் தந்தையின் ஆயுள் அவருக்கு சொந்தமான நிலத்தை அவரின் சகோதரரிடம் இருந்த மீட்பதிலேயே கழிகிறது. அவருக்கு கோபாலை IIT  அல்லது NIT  யில் சேர்த்து இஞ்சினியர் ஆக்க வேண்டும் என்பது கனவு.

அதற்காக இரண்டு முறை முயற்சித்தும் தோல்வியே கிடைக்கிறது. ராகவும் அவனது பள்ளித்தோழன். அவன் IIT -JEE தேர்ச்சி பெற்று அந்த ஊரிலேயே IT -BHU  வில் சேர்கிறான்.

கோபால் இரண்டாம் முறை தேர்வு பயிற்சிக்காக கோட்டா சென்ற போது ஆர்த்திக்கும் ராகவுக்கும் காதல் மலர்ந்து விடுகிறது. கோபால் தேர்விலும் தோல்வியுற்று, காதலிலும் தோல்வியுறுகிறான். அவன் தந்தையும் அதே நேரத்தில் இறந்து விடுகிறார்.

ஆனாலும் ஆர்த்தியுடன் நட்பு தொடர்கிறது.அதுதான் அவனது ஒரே ஆறுதல். நண்பன் ஒருவன் தயவினால் உள்ளூர் MLA  வின் உதவியுடன் அவனது நிலத்தை மீட்கிறான். அந்த நிலத்தில் MLA  வின் பணத்தில் பொறியியல்  கல்லூரி ஒன்றை அமைக்கிறான்.

ராகவ் பத்திரிக்கை துறையில் நுழைந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவன். அந்த உள்ளூர் MLA  வின் கங்கை தூய்மையாகும் திட்டத்தில் செய்த ஊழலை வெளிக்கொண்டு வந்து அவர் பதவி விலக செய்கிறான்.

கோபாலின் உண்மையான , ஆழமான அன்பினால் ஆர்த்தி அவனிடம் தன் உடல் , மனம் இரண்டையும் இழக்கிறாள். ராகவை விட்டு பிரிய முடிவெடுக்கிறாள். அதற்காக ராகவை சந்திக்க கோபால் செல்கிறான்.அங்கு அரசியல்வாதிகளின் ஊழலால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் ஏழைக் குழந்தையைப் பார்க்கிறான்.

அதன்பின் அவன் பங்களாவுக்கு வந்து அவனுள் என்ன மாற்றம் ஏற்படுகிறது? ஆர்த்தியுடன் அவன் சேர்ந்தானா என்பதே முடிவு.

நாவலின் சுவாரசியங்கள் :


IIT நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவர்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே ஒருவன் பனிரெண்டாம் வகுப்புக்கான IIT  புத்தகங்களை படித்தாக வேண்டும். அப்பொழுதுதான் அவன் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்பதாக நிறைய பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்காக மாணவர்களை படுத்தும் பாடு நிறைய.அவர்கள் சிறு வயது கொண்டாட்டங்களுடன் , இளமையும் சேர்த்தே கழிகிறது. IIT யில் வருடத்தில் சேர்வது கிட்டத்தட்ட 9000 மாணவர்கள் தான். அந்த அனைவருமே வாழ்வில் உயர்ந்ததாக, பெரிய பதவியில் இருப்பதாக தெரியவில்லை. 
அதன் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் சேரவே தனி நுழைவு தேர்வு. அந்த நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்க சில பயிற்சி நிலையங்கள் என நிகழ் கால உண்மைகளை இந்நூல் அலசுகிறது.


நான் நான்கு வருட இஞ்சினியரிங் படிக்க ஆன பணம், அந்த பயிற்சி நிலையங்களின் ஒரு வருட கட்டணத்தை விட குறைவு. ஏழை குழந்தைகளுக்கு மட்டுமல்ல, மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கே அது எட்டாக்கனிதான். என்னதான் படித்தாலும், ஏழை குழந்தைகளுக்கு IIT  வெறும் கனவாகவே தான் இருக்கும்.

பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பே இல்லாமல் அத்தகைய பயிற்சிக்கு சேர்ந்து மூன்று வருட வாழ்க்கையை வீணாக்கும் பிரதிக் போன்ற எத்தனையோ மாணவர்கள் நம் நாட்டில் உண்டு.

பத்திரிக்கையில் சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ராகவ் நினைத்தாலும், அவன் இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அவன் தந்தை கட்டாயப் படுத்துகிறார். இது இளைஞர்கள் அனுபவிக்கும் மற்றொரு இன்னல்...

தனி ஒரு மாணவன் ஒரு பத்திரிக்கையாளனாக பணி செய்வதற்கு அரசியல் வாதிகள் போடும் முட்டுக்கட்டைகள் மற்றொரு அத்தியாயம். அரசியல்வாதிகள்  கொடுக்கும் விளம்பரம் கிடைக்காதோ என எண்ணி , அவனை வேலையில் இருந்தே விரட்டும் பத்திரிக்கை, அவன் வெளியிட்ட செய்தியால் அவன் அலுவலகத்தை சூறையாடும் அரசியல்வாதியின் கைத்தடிகள் என நிறைய நிஜங்கள். ஆனாலும் ஒரு பத்திரிக்கையின்  ஆதாரமான உண்மை செய்தியால் மாற்றத்தை உண்டாக்க முடியும் என கதை ஆழமாக நிரூபிக்கிறது.

ஒரு கல்லூரி தொடங்க கொடுக்க வேண்டிய லஞ்சம் பற்றி  தெளிவாக சிவாஜி படத்தில் பார்த்தோம். இதிலும் கல்லூரி கட்டுவதில் ஆரம்பித்து, ஆசிரியர் நியமனம் முதல் அதிகாரிகளின் விசிட் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள்.

எல்லாம் விட இந்த நாவலின் சிறப்பம்சம் ஆர்த்தி - கோபால் உண்மையான காதல். கங்கை நதிக்கரையில் படகு சவாரி செய்வதில் இருந்து சினிமா, காபி குடிக்க செல்வதிலிருந்து பள்ளி நேரம் வரை எல்லா நேரமும் இருவரும் சேர்ந்தே வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். கோபால் கோட்டா சென்ற நேரத்தில் ஆர்த்தியுடன் ராகவுக்கு ஏற்படும் காதலினால் பொங்குவதும், அதனால் ஆர்த்தியுடன் சண்டையிட்டு பிறகு அவள் நினைவு எழுந்து மீண்டும் சமாதனம் ஆவது என நிறைய கவிதை எபிசோடுகள்.

ஆர்த்தி ராகவை காதலித்தாலும்  கோபாலிடமே நீண்ட நேரம் செலவளிக்கிறாள். பெண்களின் மனதை புரிந்து கொள்வது கடினம் இல்லை என்பதை கோபால் நிரூபிக்கிறான். அவளின் மனதை ஒவ்வொரு கணமும் புரிந்து கொள்கிறான். முதல் முறை படகில் முத்தம் இட்ட பிறகு, அவளிடம் மீண்டும் சந்திக்கலாமா என கேட்கிறான்.   அவள் ஏன் ? எப்பொழுது ? என கேட்காமல் எங்கே என கேட்பதில் இருந்து, அவளின் மறு முத்ததிற்கான சம்மதத்தை உணர்கிறான்.

இப்படி ஆர்த்தி, கோபாலின் காதல் நாவல் முழுக்க நட்பு, கோபம், ஊடல், கூடல் என பல பரிணாமத்தில் மிளிர்கிறது.
ஆனால் இந்த நாவலின் முடிவு, எல்லோரும் விரும்புவார்களா என தெரியவில்லை. சேத்தனின் முந்தய நாவல்களைப்போல இதுவும் மகிழ்ச்சியான முடிவாகவே இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம் .
மொத்தத்தில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை விடாமல் படிக்க தூண்டும் ஒரு மசாலா நாவல் - Revolution  2020 

1 comment:

  1. நானும் அந்த புத்தகத்தை படிக்கதான் வெயிட்டிங்.... இந்தியா வரும்போதுதான் வாங்கனும்.... இன்னும் 3 மாசம் ஆகும் :)

    மற்ற 4 புத்தகத்தையும் படிச்சாச்சு.... One of my favourite writer chetan bagath :)

    ReplyDelete