Sunday, July 17, 2011

Deivathirumagal (தெய்வத்திருமகள் )விமர்சனம்

மதராசப்பட்டினம், பொய் சொல்ல போறோம் போன்ற மென்மையான படங்களின் இயக்குனர் விஜயின் இயக்கத்தில் வந்திருக்கும் படம். 
மன வளர்ச்சி குன்றிய ஒரு தந்தைக்கும் , ஒரு குழந்தைக்கும் இடையிலான பாசப்போராட்டம் தான் கதை.
ஊட்டி அருகில் இருக்கும் அவலாஞ்சி எனும் கிராமத்தில் ஒரு பேக்கரியில் வேலை பார்க்கும் விக்ரமுக்கும், பானுவுக்கும் பிறக்கும் குழந்தை நிலா. பானு இறந்த பிறகு குழந்தையே உலகம் என இருப்பவனிடமிருந்து குழந்தையை பிரித்து சென்று விடுகின்றனர் பானுவின் அப்பாவும், அமலா பாலும். வக்கீல் அனுவின் உதவியுடன் அந்த குழந்தையை விக்ரம் மீட்கிறாரா என்ன என்பது மீதி கதை. 
மன நலம் குன்றிய பாத்திரத்தில் விக்ரம். அவர் நடிப்பை பற்றி சொல்வது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போன்றது. நடை, பாவனை , பேச்சு என அனைத்து விதத்திலும் அசத்துகிறார். குழந்தை பிறந்தது அறிந்து மகிழ்வதும் , பானு இறந்தாள் என கேட்ட அடுத்த வினாடியே முகத்தில் வித்தியாசத்தை காட்டுவதும் , இறுதி காட்சியில் நீதி மன்றத்தில் குழந்தையுடன் சைகையில் பேசிக்கொள்வது, கதை எதுவும் தெரியாமல் குழந்தைக்கு கதை சொல்லும் காட்சி என விக்ரம் தான் ராஜாங்கத்தை படம் முழுதும் நிகழ்த்தி இருக்கிறார். கடைசி காட்சியில் படம் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டது அவரின் நடிப்புக்கு சாட்சி .
.
நிலாவாக வரும் குழந்தை அத்தனை அழகு, நடிப்பிலும்.
'' நல்லவங்க சாமிகிட்ட போவாங்கனு சொல்றியே, அப்ப நீ நல்லவன் இல்லையா. ". என குழந்தை கேட்கும் கேள்விகளை கேட்கும் இடத்தில் அத்தனை வசீகரம்.
" யானை என் குண்டா இருக்கு " என நிலா கேட்பது  , " அது நெறையா சாப்பிடுது" என விக்ரம் சொல்வது. இப்படி படம் நிறைய குழந்தைகள் உலகத்தின் பதிவுகள் நிறைய.
பள்ளி போட்டியில் ஒரு குழந்தை ரைம்ஸ் தெரியாமல் முழிக்க, அது பரிசு பெரும் போட்டி என நினைக்காமல் அந்த குழந்தைக்கு ஓடி போய் சொல்லிக்கொடுப்பது என குழந்தைகளிடம் இருந்து பெரியவர்கள் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது.
தந்தையிடம் பேசுவதாக நிலாவிடம் பேசுவது,கரஸ்பாண்டன்ட்டை டினோசர் என அழைப்பது  , இறுதி காட்சியில் விக்ரமை பார்த்ததும் சந்தோசத்தில் நம்மையும் மகிழச்செய்வது என நிலா அனைவரயும் கவர்கிறாள். 
குழந்தையுடன் விக்ரம் பேசும் வெகுளித்தனமான வசனங்களில்  வசனகர்த்தா தெரிகிறார். 
" டாக்டர்கிட்டயும்  வக்கீல்கிட்டயும்தான் பொய் சொல்லக்கூடாது, ஆனா டாக்டாரும் வக்கீலும் பொய் சொல்லலாம் " என படம் முழுக்க நம்மை கடந்து செல்லும் நல்ல வசனங்கள் நிறைய .
அனுஷ்காவின் இடுப்பை விட நடிப்பு நன்றாகவே இருக்கிறது. கேஸ் கிடைக்காமல் திண்டாடுவதும், விக்ரம் நிலா காணாமல் போனதை விவரிக்கும்போது அறுவை தாங்காமல் தப்பிக்க சந்தானத்துடன் பிசியாக இருப்பது போல காட்டிக்கொண்டு எஸ்கேப் ஆவது, பின்பு விக்ரமின் உண்மை நிலை அறிந்து அவருக்காக நாசருடன் மோதுவது என அவ்வளவு அழகு. நெற்றியில் திருநீறு கீற்றலுடன் அழகாக இருக்குகிறார். 
அவருக்கும் அவரது தந்தைக்குமான உரசல்களும், விக்ரம் வந்த பின்பு அது சரி ஆவது என அது ஒரு சின்ன கவிதை. 
ஊட்டியில் பாஸ்கர் மனைவி மேல் சந்தேகப்படுவதாக வரும் கதை தேவை இல்லாததாக தோன்றினாலும் உறுத்தவில்லை . 
அனுஷ்காவின் தோழியாக வருபவரின் காதல் கதை, சந்தானத்தின் டைமிங் என சீரியசான கதையில் நகைச்சுவையும் கதையை கெடுக்காமல் நன்றாகவே இருக்கிறது. 
அமலா பால் , கார்த்திக் என கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். அமலா பால் அழகாக இருக்கிறார் என்பது கொசுறு செய்தி.  
ஊட்டியின் அழகை நீரவ் ஷாவின் கேமரா அழகாக காட்டுகிறது. விக்ரம் கட்டிபிடித்தவுடன் வரும் அந்த பட்டு தேவை இல்லை என்றாலும், கேமரா கோணங்களும், சைந்தவியின் குரலும், அனுஷ்காவும் இருப்பதால் அப்படி ஒரு உணர்வு வராமல் இருக்க செய்கிறது.
ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் சில இடங்களில் நெகிழ வைக்கிறார். விக்ரம் கதை சொல்லும் பாடல், குழந்தைக்கு பொருள் வாங்க செல்லும்போது வரும் பாடல் என கதையின் ஓட்டத்திலே அனைத்து பாடலும் வருவது நன்றாக இருக்கிறது. 
விக்ரமின் மனைவியாக வருபவரை காட்டமல் வசங்கள் மூலமாகவே அவர்களின் உறவை சொல்வதும், அவரின் புகைப்படத்தை மங்கலான வெளிச்சத்தில் காட்டுவது என அவரை காட்சிப்படுத்திய விதம் அழகு. 
எந்த இடத்திலும் உறுத்தாத நடிப்பு, லாஜிக் மீறாத திரைக்கதை , சரியான நடிகர்கள் தேர்வு என விஜயின் உழைப்பு நன்றாக தெரிகிறது. 
அன்பை, பாசத்தை எத்தனையோ படங்கள் எத்தனையோ விதத்தில் சொன்னாலும், இது கொஞ்சம் புதுசு.
எத்தனை அவசரம் என்றாலும் சிக்னலில் பச்சை விளக்கு வந்தபின் செல்வது , பொய் சொல்லாதது , ஏமாற்ற தெரியாதது என குழந்தைகள் உலகத்தை காட்டி இருந்தாலும், அதன் மூலம் நாம் கற்க வேண்டியது எவ்வளோ இருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இது குழந்தைகளுக்கான படம் மட்டும்  அல்ல, நாம் குழந்தைகளாக மாற வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தும் படம்,
ஒரு மென்மையான கதையை இத்தனை அழகாய் சொன்ன இயக்குனருக்கு தான் அத்தனை பெருமையும். வெட்டு, குத்து, காமம் என தடம் புரண்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நிறைய திருமகள்கள் வர வேண்டும் 
தெய்வதிருமகள் -  அள்ளி அனைத்து கொஞ்சப்பட வேண்டியவள். 

No comments:

Post a Comment